ஜோன்ஸ்டன் பிணையில் விடுவிப்பு!
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுக்குச் சுமார் 7.4 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்துக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்காகச் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, அதற்கான ஒப்பந்தத்தைத் தனக்குத் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
