பாலம் அமைக்க வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாபச் சாவு! மட்டக்களப்பு – நெடியமடுவில் சோகம்.

மட்டக்களப்பு, நெடியமடு பகுதியில், பாலம் அமைப்பதற்காக நீர் எடுப்பதற்காக வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயதுடைய சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடியமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்பக்கம், உன்னிச்சைக் குளத்திலிருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்கு மேற்படி சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றைத் தோண்டியுள்ளது. எனினும், அந்தக் குழிக்கு எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், நேற்றுப் பிற்பகல் வேலிக்கு அருகில் நடந்து சென்ற சிறுவன், பாதுகாப்பற்ற முறையில் வெட்டப்பட்டிருந்த அந்தக் குழியில் தவறி விழுந்துள்ளார்.

குழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாகக் கரடியனாறு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலம் நிர்மாணப் பணியின் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாததே இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த சிறுவனின் உடலைப் பார்வையிட்டு நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, பாலம் புனரமைப்புப் பணிகளின் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதமைக்கே இந்தப் பகுதி மக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.