சிங்கள பௌத்தர்களுக்குப் பாரபட்சம் காட்டுகின்றது அநுர அரசு! – தயாசிறி குற்றச்சாட்டு.

தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அநீதிகளையும் பாரபட்சங்களையும் இழைத்து வருகின்றது என்று எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் அவர் எழுப்பிய முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகள் வருமாறு:-

“தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சகோதர சமுதாயமாகவே கருதுகின்றோம். எனினும், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனவாதம் பேச அனுமதிக்க மாட்டோம் எனக் கூறுவதும், அனுராதபுரத்திற்கு வடக்கே விகாரைகளுக்குச் செல்வோரை இனவாதிகளாகச் சித்தரிப்பதும் முரணானது. மேலும், வரலாற்றில் முதன்முறையாகப் புத்தர் சிலை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டமை மற்றும் அனுபவமிக்க சிங்கள பௌத்த நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் குருசிங்க ஆகியோரின் நியமனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டமை போன்ற செயற்பாடுகள் அரசாங்கத்தின் பாரபட்சப் போக்கைக் காட்டுகின்றன.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் நாட்டின் முன்னணி வலுவான அரசியல் கட்சியாக மாற்றும் வரை தங்களது அரசியல் பயணம் ஓயாது.

கட்சியின் மூத்த உறுப்பினரான நிமல் சிரிபால டி சில்வா தனது தனிப்பட்ட அரசியல் வியாபாரத்தையும் சுயநல நிகழ்ச்சி நிரலையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அமைச்சுப் பதவிகளுக்காக நாட்டையும் கட்சியையும் காட்டிக்கொடுக்கும் இழிவான செயல்களில் ஈடுபடாமல், சாதாரண மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.