மோ. சைக்கிள் பனை மரத்தில் மோதி 22 வயது இளைஞர் பரிதாப மரணம்! கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் துயரம்.
கிளிநொச்சி, உருத்திரபுரம் டி – 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில் மோதி நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
