சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு.
அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி தேரர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பு – சென்ட்ரல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த அரச ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என்று பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து, அந்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, மட்டக்களப்பு பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். அதன்போது அவரை இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரருடன் மேலும் 5 பேர் சென்று அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் என்றும், அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளமையால் சந்தேகநபர்களைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பொலிஸார் நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தனர். அதனைப் பரிசீலித்த நீதிவான், அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
