டெல்லி கட்டிடம் இடிந்து விபத்து: வாட்ஸ்-அப் ‘லைவ் லொகேஷன்’ மூலம் உயிர்தப்பிய மாணவர்!

டெல்லி,

டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 5 மாடிகளை கொண்ட தனியார் விடுதி கட்டிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் மாணவர்கள் ஆவர். மேலும் பலர் காயமடைந்தனர்.இந்த கட்டிடத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் பலர் தங்கியிருந்தனர். கட்டிடத்தின் கீழ்தளத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மதிய உணவை முடித்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததாக உயிர் தப்பிய மாணவர்கள் கூறினர்.

திகில் அனுபவம்
இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நிதேஷ் சிப் என்ற மாணவர், 1.5 மணி நேரம் உயிருக்கு போராடியதாகவும் , செல்போனில் லைவ் லோகேஷன் அனுப்பியதால் உயிர் பிழைத்ததாகவும் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மாணவர் கூறியிருப்பதாவது;கட்டிடம் இடிந்து விழுந்தபோது நானும் எனது நண்பரும் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டோம். சுமார் 1½ மணி நேரம் வெளியே வர முடியாமல் தவித்தோம். அப்போது என்னுடன் சிக்கியிருந்த நண்பர், வாட்ஸ் அப்பில் லைவ் லொகேஷனை அனுப்பி விட்டார்.

உடல் முழுவதும் மரத்து போனது
மேலும் நண்பர்கள் சிலருக்கு அவசர உதவி கேட்டு மெசேஜ்ஜும் அனுப்பினார். இதையடுத்து நண்பர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து எங்கள் இருவரையும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இடிபாடுகளில் சிக்கியதால் எனது உடல் முழுவதும் மரத்துப்போனது. எதையும் உணர முடியவில்லை. எனக்கு ரத்தம் வழிவது தெரிந்தது. சிறிது நேரத்துக்கு பிறகுதான் முழுமையாக சுயநினைவுக்கு வந்தேன். கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு அது ஆபத்தான நிலையில் இருப்பதாக தங்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை வெளிப்புறத்தில் கட்டிடம் வழக்கம்போலவே இருந்தது.

சுவர்களில் விரிசல்கள் உள்ளிட்ட எச்சரிக்கை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை” என்றார். மேலும், மாணவர்கள் படிப்பதற்காக டெல்லிக்கு வரும்போது இதுபோன்ற விடுதிகளில் தங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தனியார் விடுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிதேஷ் சிப் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.