மகனுக்குக் கொள்ளையடிக்க இடமளித்துவிட்டு கைது செய்ததும் கண்ணீர் சிந்தி அனுதாபம் தேடுவதில் எந்தப் பயனும் கிடையாது! – நாமலுக்காக மேடையேறிய மஹிந்தவுக்கு அநுர சாட்டையடி.
“தேசிய மக்கள் சக்தி அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலிக் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்யும் என்றும், இந்த விடயத்தில் எவருக்கும் மன்னிப்பு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொலன்னறுவையில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாதாள உலகக் குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாகத் துடைத்தெறியப்படும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. போதைப்பொருள் வியாபாரமும் ஒழிக்கப்படும்.
எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. விசாரணைகள் சிறப்பாக இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளின் பிரகாரம் – சட்டத்துக்கமையவே தண்டனை வழங்கப்படுகின்றது. இது பழிவாங்கலா?
எமக்கு எவருடனும் தனிப்பட்ட குரோதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை அழித்த ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
மகன் கொள்ளையடிக்கும்போது, மகனே அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தந்தை கூறி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், கைது செய்த பின்னர் அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை.
மகனுக்குக் கொள்ளையடிக்க இடமளித்துவிட்டு, கைது செய்ததும் கண்ணீர் சிந்துகின்றனர். அனுதாபம் மூலம் இதனைத் தடுத்துவிட முடியாது.” – என்றார் ஜனாதிபதி.













