சிங்கப்பூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஷிராந்தி ராஜபக்க்ஷ.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை சர்ச்சைக்கிடையே சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள பிரபல ‘மவுண்ட் எலிசபெத்’ வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணைக்கான முதற்கட்ட அறிவித்தல் கடிதம் தங்காலையில் உள்ள ‘கார்ல்டன் ஹவுஸ்’ இல்லத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஷிராந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயல்வதை அறிந்த நிதிக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர், நேற்று அதிகாலை விமான நிலையத்துக்கு விரைந்து சென்று புறப்படும் நுழைவாயில் அருகே வைத்து அவரிடம் கடிதத்தை ஒப்படைக்க முயன்றனர். அந்த அறிவித்தலை அவரது உறவினர் ஒருவர் ஏற்றுக்கொண்டார்.

ஷிராந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் எனவும், செப்டெம்பர் 24 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி ‘சிரிலிய சவிய’ நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பார் எனவும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.