இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை – ஜெனிவாக் கூட்டத் தொடரில் பிரதி உயர்ஸ்தானிகர் விசனம்.

இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைந்து வருகின்றன என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில், ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் நேற்று வாசிக்கப்பட்டது.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொறுப்புக்கூறலில் தாமதம்

ஆயுதமோதல் காலத்து மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகச் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை. எனினும், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதால் நியாயமான வழக்கு விசாரணை மற்றும் முறையான நீதிமன்ற மேற்பார்வை உள்ளிட்ட நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்துத் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணாமல்போனோர் அலுவலகம்

அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்வதால், அந்த அலுவலகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

போர்க் காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மலையகச் சமூகத்துக்கு
நிதி ஒதுக்கீடு அவசியம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் பிரகாரம் நாட்டின் வருமானத்தில் 82 வீதமானவை கடன் மீள்செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம், கல்வி மற்றும் அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர கரிசனைக்குரியது. குறிப்பாக மலையகச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு அவசியமாகும்.

நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்றுக்கு வரவேற்கத்தக்கது.

இலங்கையில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.