தம்பலகாமத்தில் எருமை மாட்டுடன் வான் மோதி விபத்து! – சாரதி படுகாயம்

திருகோணமலை, தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வான் மோதிய விபத்தில் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வான் ஒன்று, நேற்றுப் புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியடி பகுதியில் வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த வான் சாரதி உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியானது மக்களின் அதிக போக்குவரத்து மற்றும் குடியிருப்புப் பகுதியாகக் காணப்பட்ட போதிலும், வீதியில் போதிய மின் விளக்குகள் இன்மை காரணமாக அந்தப் பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகின்றது என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.