யாழ். பல்கலையில் திலீபன் நினைவேந்தல் உண்ணாவிரதம்! ஒலிபெருக்கியை அகற்றுமாறு கோரி பொலிஸார் குழப்பம்!!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு பணித்தமையால் அங்கு திடீர் பரபரப்பும் முறுகல் நிலையும் ஏற்பட்டது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மாணவர்களால் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் நடைபெறும் இடத்துக்குத் திடீரென வருகை தந்த பொலிஸார், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை உடனடியாகக் கழற்றுமாறு உத்தரவிட்டனர். ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதாயின் பொலிஸ் நிலையம் சென்று முறையான அனுமதி பெற்று வருமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த போராட்டக்காரர்கள், தாங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதாகவும், இதற்கான அனுமதியை உடனடியாக வழங்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினர். எனினும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்று பேசுமாறு பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பயன்படுத்திய ஒலிபெருக்கிகளையும் இதே பொலிஸார் கழற்றிச் சென்றமையுடன், பல தடவைகள் கோரியும் இதுவரை அதனைத் திருப்பித் தரவில்லை எனவும், அதற்கான அனுமதியையும் வழங்கவில்லை எனவும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
எவ்வாறாயினும், மாணவர்களின் விளக்கத்தை ஏற்க மறுத்த பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் விவரங்களைப் பதிவு செய்துகொண்டு ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றுமாறு மீண்டும் வற்புறுத்தினர். இதனால் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் முற்றியதுடன், பல்கலைக்கழகப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழலும் உருவாகியது.


