அடுத்த அரசும் அநுரவுனுடையதே! – அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி.

அடுத்த அரசும் தேசிய மக்கள் சக்தி அரசாகவே இருக்கும் என்பதையும், அநுரகுமார திஸாநாயக்கவே நாட்டின் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் இருப்பார் என்பதையும் மக்கள் தற்போது உறுதிப்படுத்தி வருகின்றனர் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனநாயக முறைப்படி நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. திருட்டு, மோசடி மற்றும் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்கள் போதாது எனின், புதிய நீதிமன்றங்களையும் சட்டங்களையும் உருவாக்கிக் கொள்ளையர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், அதற்கேற்ப நாட்டில் முழுமையான விலை அதிகரிப்பை அரசு மேற்கொள்ளவில்லை.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்பை ஈடுசெய்து மக்கள் மீது சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக மேலதிகமாக 41 ஆயிரத்து 000 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் முறையே சுமார் 140 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை இருந்தும், ஓட்டோ, பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு இந்தச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்திய யுத்தத்தால் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விலைகளில் தாக்கம் ஏற்பட்டாலும், நாட்டு மக்களுக்குப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் சந்தையில் கிடைப்பதை உறுதிப்படுத்த இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் புத்தகங்கள் மீதான வரி மற்றும் பணப் பரிமாற்றத்துக்கான வரிச் சலுகைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.