24 மணித்தியாலங்களில் நால்வர் பரிதாபச் சாவு!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை – திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளார். ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிரே வந்த ஓட்டோவுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஓட்டோ சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, தர்மபால மாவத்தையில் கல்முனை நோக்கிச் சென்ற வான் ஒன்று முன்னால் சென்ற ஓட்டோவுடன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கு, தியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹொரணையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற பஸ்ஸுடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்து கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும், 16 வயதுடைய யுவதியுமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.