சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி ஞானசார தேரர் விவகார போராட்டம் நியாயமற்றது! – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவிப்பு.

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் சட்டப் பொறிமுறைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதை அவர் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நீதிமன்ற தண்டனைக்கு உட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் முற்றிலும் நியாயமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பொன்றை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துவது நீதித்துறை சுயாதீனத்துக்குப் பாதகமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நபர் அல்லது பதவி நிலைகளைக் கடந்து சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே என்பதை தற்போதைய அரசு உறுதியாக நம்புகின்றது என்று தெரிவித்த நீதி அமைச்சர், தவறு இழைத்தவர்கள் எவராக இருந்தாலும் சட்ட நடவடிக்கைகள் நடுநிலையாகவே முன்னெடுக்கப்படும் என்றார்.

நீதித்துறையின் முடிவுகளில் அரசியல் தலையீடுகளுக்கோ அல்லது வெளி அழுத்தங்களுக்கோ இடம் அளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சட்டத்தின் மேலாதிக்கத்தை மதிப்பதே நாட்டின் ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உறுதுணையாக அமையும் என்று குறிப்பிட்ட அமைச்சர், சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக அழுத்தங்களைப் பிரயோகித்து நபர்களை விடுவிக்கக் கோருவது நாட்டின் சட்ட ஒழுங்குக்குச் சவாலாக அமையும் என்றும் தெரிவித்தார்.

எனவே, குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய நியாயமற்ற போராட்டங்களைக் கைவிட்டு, நாட்டின் நீதித்துறைக்கும் சட்ட கட்டமைப்புக்கும் மதிப்பளித்துச் செயற்படுமாறு அனைத்துப் தரப்பினரையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.