புதிய சட்டமூலங்களை எதிர்த்து போராட முழுச் சுதந்திரம் உண்டு – நியாயமான திருத்தங்களை ஏற்க அரசு தயார்; பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு.

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்ட மூலத்துக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது என்றும், இந்தச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அந்த உரிமை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படமாட்டாது என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அதேவேளை, இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் நியாயமான முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், அவற்றை ஏற்றுக்கொண்டு சட்டமூலங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசு தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசு பல்வேறு கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து மக்களைப் பாரிய அடக்குமுறைக்கு உட்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே தெளிவான விளக்கமளித்துள்ளார். இந்த விடயம் தற்போது நாடாளுமன்றத்தில் தீவிர விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எவரும் அந்த விவாதங்களுக்குச் செவிமடுத்து நாட்டின் உண்மையான நிலைமையைச் சரியாக அறிந்துகொள்ள முடியும்.

புதிய சட்டமூலங்கள் தொடர்பில் நியாயமான முன்மொழிவுகள் ஏதேனும் முன்வைக்கப்பட்டால், அவற்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரிசீலித்துத் திருத்துவதற்கு அரசு தயாராக இருக்கின்றது. அவ்வாறு சட்டங்களைத் திருத்துவதற்கான இயலுமை அரசுக்கு இருக்கின்றது என்றும் ஜனாதிபதி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சட்டமூலங்களுக்கு எதிராக ஒருவர் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவொன்றை வெளியிட்டால், நீதிமன்ற உத்தரவின்றிப் பொலிஸார் அல்லது இராணுவத்தினர் அவரது வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியுமா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகின்றது. ஆனால், அவ்வாறான அடக்குமுறை ஏற்பாடுகள் எதுவுமே இந்தப் புதிய சட்டமூலங்களில் இல்லை.

மக்கள் முன்வைக்கின்ற நியாயமான முன்மொழிவுகள் மற்றும் சுட்டிக்காட்டப்படும் குற்றச்சாட்டுகளை அரசு நேர்மறையாக ஏற்றுக்கொள்கின்றது. மக்களின் கருத்துகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாகச் சென்று எமது அரசு ஒருபோதும் செயற்படாது. மக்களின் கருத்துகளைக் கருத்திற்கொள்வதே தற்போதைய அரசின் முதன்மை அணுகுமுறையாகும்.

உண்மையில், இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் மக்களிடையே தேவையற்ற பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி நாடு முழுவதும் அரசுக்கு எதிரான எதிர்ப்பலையை உருவாக்குவதற்கே சில தரப்பினர் திட்டமிட்டு முயற்சிக்கின்றனர். சட்டத்தரணிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், எதிர்தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் சில ஊடகவியலாளர்கள் இவ்வாறான எதிர்ப்புப் போக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், ஜனநாயக ரீதியில் புதிய சட்டமூலங்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உரிமையும் இருக்கின்றது.

சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட அதற்கு எதிராக அமைதியான வழியில் போராட்டங்களை நடத்துவதற்கான அடிப்படை உரிமை மக்களுக்கு எவராலும் மறுக்கப்படமாட்டாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.