தமிழ்த் தேசியத்துக்காக அரை நூற்றாண்டு காலம் ஓயாது ஒளிவீசிய விடுதலைச் சுடர் அணைந்தது! – சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு வடமராட்சி ஊடக இல்லம் இரங்கல்.

“தமிழ்த் தேசியத்துக்காக அரை நூற்றாண்டு காலம் ஓயாது ஒளிவீசிய விடுதலைச் சுடர் அணைந்தது! அடக்குமுறைகளை உரமாக்கி விடுதலை அரசியலை விழுதெறிந்தோங்கச் செய்த வீரனே நிம்மதியாக உறங்குங்கள்!!”

– இவ்வாறு தமிழ்த் தேசியச் சிரேஷ்ட அரசியல்வாதி மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழர் விடுதலைக்காக வரலாற்றின் வழியே ஆயுதமேந்திய போராளியாகவும், அரசியல் நீரோட்டத்திலும் அதே கொள்கை வீச்சுடன் தமிழ்த் தேசியப் போராளியாகவும் சுமார் ஐம்பதாண்டு காலம் சமரசமின்றித் தமிழ் மக்களுக்காகக் களமாடிய வீரனே சிவாஜிலிங்கம்.

தமிழர் தேச வரலாற்றில் என்றென்றும் ஒளிவீசும் அணையா விளக்காகப் பிரகாசிக்கும் ஒரு விடுதலைச் சுடரே மறைந்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியலில் என்றும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவால் மீளாத் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது

Leave A Reply

Your email address will not be published.