ரொட்டும்ப அமில’ இலங்கைக்கு நாளை அழைத்து வரப்படுகின்றார் – ரஷ்யா சென்றது சி.ஐ.டி. விசேட குழு.

ரஷ்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் என அறியப்படும் ‘ரொட்டும்ப அமில’ எனும் அமில சம்பத் சேபால ரத்நாயக்க, நாளை வெள்ளிக்கிழமை இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளார்.

இதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று ஏற்கனவே ரஷ்யாவுக்குப் பயணமாகியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ரொட்டும்ப அமில’ என அழைக்கப்படும் இவர், தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற பல்வேறு மனிதப் படுகொலைகள், கப்பம் கோருதல் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபராவார்.

சட்ட நடவடிக்கைகளைப் புறக்கணித்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த இவர், சர்வதேசப் பொலிஸாரால் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய, கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் அவர் நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.