இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்! – இளைஞர் ஒருவர் படுகாயம்.

குருநாகல் – பன்னலைப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் பன்னலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதிவேகத்தில் பயணித்த நிலையில், சாரதிகளின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நாரம்மலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.