அரசு விரைவில் கவிழும்! – இராதாகிருஷ்ணன் எம்.பி. திட்டவட்டம்.
“அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்போது எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஏழைகளின் வயிற்றில் இந்த அரசு அடித்துவிட்டது. இந்த அரசின் வீழ்ச்சி வெகுதொலைவில் இல்லை.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இன்று எமது நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாலுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக எங்களுடைய மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறானதொரு நிலையில் அரசு எரிபொருட்களின் விலையை அதிகரித்திருப்பதானது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாகவே இருக்கின்றது.
இந்த எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக எங்களுடைய பெருந்தோட்டத் தொழிலார்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். காரணம் இன்றும் பல பெருந்தோட்டப் பகுதிகளில் மண்ணெண்ணெயையே அதிகமாக எங்களுடைய மக்கள் பாவித்து வருகின்றார்கள். இந்த விலையேற்றத்தை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
இந்த எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக பாண் உட்பட பேக்கறி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது. இது சாதாரண மக்களைப் பெரிதும் பாதிக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஓட்டோ ஒட்டுநர்களின் நிலைமை இன்னும் பரிதாபகரமான ஒரு நிலைக்குச் சென்றுவிடும். அவர்கள் தங்கள் தொழிலைச் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற இந்தநிலையில் விலையேற்றம் இன்னும் பாதிப்பையும் சாதாரண மக்களிடம் அதிக கட்டணத்தையும் அறிவிட வேண்டிய நிலைமை ஏற்படும்.
போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கும். ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இப்போது இருக்கின்ற விலைகளையே பொதுமக்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். இதில் இன்னும் விலையேற்றம் ஏற்பட்டால் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
விலேயேற்றம் பிழையானது என ‘மொட்டு’ கட்சியின் செயலாளரே கருத்து வெளியிட்டுள்ளார். அப்படியானால் இது யாருடைய வழிகாட்டலில் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
ஆட்சியில் இருக்கின்ற அரசு ஏழைகளின் தோழனாக இருக்க வேண்டும். அப்படி இருந்தவர்தான் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்ஹ பிரேமதாஸ. அவர் மறைந்தாலும் அவருடைய சேவைகளை இன்றும் மக்கள் மறக்கவில்லை. அதற்குக் காரணம் அவர் ஏழைகளின் பங்காளனாக இருந்தவர்.
அதேபோல் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஏழைகளுக்காகப் பாடுப்பட்டவர். எனவே, ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்ற எந்த அரசும் ஆட்சியில் நிலைத்திருக்க முடியாது. இந்த அரசு வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது” – என்றார்.