அன்னை தெரசா அறக்கட்டளை உரிமத்தை புதுப்பித்த மத்திய அரசு…!
மேற்கு வங்கத்தில் உள்ள அன்னை தெரசா அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் பணியை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு மேற்கொண்டது. அதில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத அறக்கட்டளைகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேற்கு வங்கத்தில் உள்ள அன்னை தெரசா அறக்கட்டளை அந்நிய பண பரிவர்த்தனை தொடர்பாக தாக்கல் செய்த ஆவணங்கள் திருப்தி அளிக்காததால் அதன் உரிமத்தை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் பதிவிட்டதால் இந்த விவகாரம் பூதாகரமானது. ஆனால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்று அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் விளக்கமளித்ததால் பிரச்னை சற்று ஓய்ந்தது.
இந்நிலையில் அனைத்து ஆவணங்களையும் அறக்கட்டளை நிர்வாகம் சமர்ப்பித்ததை அடுத்து அதன் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.