ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய இராணுவம்! – சஜித் புகழாரம்.

“அன்று முப்பது வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதியில் இறங்கிய போது அவர்கள் மீது ஒரு தோட்டாவைக் கூட பிரயோகிக்கவில்லை.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட ஐக்கிய இராணுவ சக்தியின் கூட்டத்தில் நேற்று (19) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்நாட்டின் முப்படைகளின் தலைமையிலான பாதுகாப்புத் துறையினர் மக்கள் போராட்டத்துக்கு மௌனமாக இருந்து பங்களிப்பை வழங்கினர்.

நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் என்பது நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்த ஒரு பகுதியினராகும்.

அன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதாகச் செயற்பட்ட அரசு, அவற்றில் ஒன்றையாவது வழங்கியதா?

நான் ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவில் அனைத்துப் பாதுகாப்புப் படையினருடனும் சமூக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இது சந்தர்ப்பவாத ஒப்பந்தமல்ல. நிலையான தீர்வுகள் மூலம் இராணுவத்தினரை வலுவூட்டுவதே இதன் நோக்கம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.