இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் அங்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான பல ஷாக் வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு ஏற்படும்.

உலகில் வேறு எந்த பகுதிகளைக் காட்டிலும் இந்த ரிங் ஆப் ஃபயர் பகுதியில் தான் அதிகப்படியான நிலநடுக்கம் ஏற்படும். இந்நிலையில், இப்போது அங்கு மோசமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

தீவு நாடான இந்தோனேசியாவில் இப்போது சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வின்படி, மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா வரையிலும் கூட உணரப்பட்டது. இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

சமீப காலங்களில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமானதாக இது கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 44 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல சுமார் 700 பேர் வரை இதில் காயமடைந்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் இப்போது தான் தொடங்கி உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது..

இதில் பலருக்கும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியதில் கை, கால் முறிவுகளே ஏற்பட்டு உள்ளது. இவ்வளவு மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாகவே மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நல்வாய்ப்பாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. அப்படி சுனாமியும் தாக்கினால், பாதிப்புகள் மிக மோசமானதாகவே இருந்து இருக்கும்.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான். அங்கு இந்தாண்டு பிப். மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல கடந்த 2004 இல் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சுனாமி 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் சுனாமி தாக்கவும் இதுதான் காரணம். இந்த சுனாமியில் 2,30,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 என்றவாறு நிலநடுக்கம் பதிவானது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் அது ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் உணர முடிந்தது. இதன் காரணமாக அங்கு உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் நிலநடுக்கம் மேலும் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.