சகல தரப்பு பங்குபற்றுதலுடன் டிசம்பர் 11 முதல் தீர்வுப் பேச்சு!

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுக்களை தற்போதைய வரவு – செலவுத் திட்டம் முடிந்த கையோடு, அதையடுத்து டிசம்பர் 11ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பங்குபற்றுதல்களுடன் விரைந்து நடத்தி முடிக்க இன்று நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சபையில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய சமயம் எழுந்த குறுக்கீடுகளை அடுத்து, இது தொடர்பில் ஆக்கபூர்வமான வாதப் பிரதிவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று தீர்மானம் எட்டப்பட்டது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கான ஒதுக்கீடு மீது குழுநிலை விவாதம் இன்று நடைபெற்றது. அதற்குப் பதில் அளிப்பதற்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரசன்னமாகி இருந்தார்.

அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. உரையாற்றினார்.

இனப் பிரச்சினைத் தீர்வுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், அதைத் தீர்க்காமல் நாடு மேலெழ முடியாது என்பவற்றையெல்லாம் அவர் விவரமாக விவரித்தார்.

எதிர்காலத்துக்கான தீர்வு காணப்படவுன் வேண்டும், கடந்த காலத்தின் உண்மைகள் கண்டறியப்பட்டு, பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றார் சுமந்திரன் எம்.பி.

எதிர்காலத்தைப் பாதுகாப்பாக மாற்றிக்கொண்டுதான், கடந்த காலத்தின் விடயங்களைப் பார்க்க வேண்டும் என்ற தென்னாபிரிக்க அனுபவம் வலியுறுத்துவதையும் அவர் குறிப்பிட்டார்.

தீர்வுப் பேச்சை ஆரம்பித்து, விரைந்து முடிப்போம் என்று கடந்த சில நாள்களாக ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார். அந்த முயற்சிக்குக் குந்தகமாக அமையக்கூடாது என்பதற்காகத்தான் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது இல்லை என்ற முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது என்று அவர் விளங்கப்படுத்தினார்.

இனப் பிரச்சினைக்காகப் பல்வேறு நடவடிக்கைகள், பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டன என்று அவற்றை விலாவாரியாக எடுத்துரைத்த சுமந்திரன் எம்.பி., ஓர் இணக்கமான இறுதித் தீர்வை எட்டுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என்றார்.

சமஷ்டித் தீர்வை இந்த நாட்டுக்கு முதலில் பிரேரித்தவர்கள் சிங்களத் தலைவர்கள் என்று குறிப்பிட்டு அவை பற்றியும் அவர் விவரமாக கூறினார்.

ஜனாதிபதி விரும்பினால் இந்த வரவு – செலவுத் திட்டம் டிசம்பர் 8ஆம் திகதி முடிந்த கையோடு, ஒரேடியாக தொடர்ந்து இருந்து பேசி இந்த டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார் சுமந்திரன் எம்.பி.

சுமந்திரனின் பேச்சை அடுத்து பதில் அளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “வரவு – செலவுத் திட்டம் முடிந்ததும் இந்த விடயத்தைப் பேசி முடிவெடுக்க முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரா?” என்று சுமந்திரனைப் பார்த்துக் கேட்டார்.

“ஆம். தொடர்ந்து பேசி டிசம்பர் 31 க்குள் முடிவெடுப்போம். நாம் தயார்” – என்று சுமந்திரன் எம்.பி. அறிவித்தார்.

அடுத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாரா என்று அக்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி.

அப்போது சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ இருக்கவில்லை.

”நாங்கள் அதிகாரப் பகிர்வுக்கு எப்போதும் தயார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவே 13 ஐ ஒழிக்க முயன்றார். ’13 பிளஸ்’ என்று சொல்லிய மஹிந்த ராஜபக்‌ச இங்கு இருக்கின்றார். அவரைக் கேளுங்கள். அவர் தயாரா என்பதைக் கூறட்டும். அதிகாரப் பகிர்வுக்கு எப்போதும் எதிர்ப்புக் காட்டி வந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன இப்போது என்ன சொல்லப் போகின்றார்?” – என்று லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

“13க்கு எதிராக நான் எப்போதும் செயற்பட்டவன் அல்லன்'” என்று நிலைமையைத் தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

மீண்டும் மீண்டும் மஹிந்தவின் கருத்து கேட்கப்பட்டது. அதை அடுத்து அவர் எழுந்து, தாம் 13 பிளஸுக்குத் தயார் என்றார்.

இதையடுத்து “வரும் 8ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் முடிந்ததும் அடுத்து ஒரு நாள் நாடாளுமன்றம் இருக்கும், அது முடிந்ததும், டிசம்பர் 11ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் எல்லோரும் ஒன்று கூடி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் முடிவை எடுப்போம். எல்லோரும் இணங்குகின்றீர்கள்தானே?” – என்று ஜனாதிபதி கேட்டார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதமர் தினேஷ் குணவர்த்தன எல்லோரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத் தமது முடிவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.