பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு: கோட்டாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், தனது சமர்ப்பணங்களை டிசம்பர் 16 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இது தொடர்பான மனுக்கள் இன்று முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை வலுவிழக்கச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மனுக்கள் தொடர்பில் முன்னதாக சீராக்கல் மனுவைத் தாக்கல் செய்திருந்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாகக் குறிப்பிட அனுமதி கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்சவை சம்பந்தப்பட்ட மனுக்களில் பிரதிவாதியாகக் குறிப்பிட அனுமதித்ததுடன், டிசம்பர் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவருக்கு அழைப்பாணையை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.