எடை குறைந்த லட்டு.. காத்துக்கிடக்கும் பக்தர்கள்.. திருப்பதியில் புதிய சிக்கல்!

கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி மலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் எடை வெகுவாக குறைந்து இருந்தது தொடர்பாக பக்தர் ஒருவர் சமூக வலைதளத்தில் ஆதாரத்துடன் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதாவது 180 கிராம் எடையை இருக்க வேண்டிய லட்டு 95 முதல் 120 கிராம் வரை மட்டுமே எடை இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்போது முதல் லட்டு கவுண்டரில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த ஊழியர்களை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிரமாக கண்காணிக்க துவங்கினர். மேலும் லட்டு கவுண்டரில் கள்ள சந்தை வியாபாரத்தை ஒழித்து கட்டவும் தேவஸ்தானம் தீவிர முயற்சியில் இறங்கியது.

இந்த நிலையில் நேற்று மதியம் முதல் கவுண்டரில் ஒப்பந்த அடிப்படையில் லட்டு விநியோகம் செய்யும் ஊழியர்கள் வேலைக்கு வர மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் வேறு இடங்களில் இருந்து தேவஸ்தான ஊழியர்கள் வரவழைத்து அவர்களுடன் தன்னார்வ சேவையாளர்களை இணைத்து பக்தர்களுக்கு நிர்வாகம் லட்டு பிரசாதம் வழங்கி வருகிறது.

இதனால் கவுண்டரில் லட்டு இருப்பு இருந்தும் பக்தர்களுக்கு கிடைக்காத நிலை நிலவுகிறது. எனவே பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து லட்டு வாங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.