நாமே இலங்கையின் உண்மையான நண்பன்! – சாணக்கியனுக்குப் பதிலடி கொடுத்தது சீனா.

“நாமே இலங்கையின் உண்மையான நண்பன். தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புக்களை நாம் ஊக்குவித்து வருகின்றோம்.”

இவ்வாறு சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருகின்றது என்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாகப் பங்கேற்றது என்றும் தூதரகம் கூறியுள்ளது.

சீனாவின் நிதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியைத் தாமதமின்றி தொடர்பு கொண்டது என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் நாட்டுக்குப் பயணம் செய்து வருகின்றன என்றும், இருதரப்புப் பேச்சுக்கள் தொடர்கின்றன என்றும் அது கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சீனத் தூதரகத்தால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையான நண்பராக இருந்தால், சர்வதேச நாணய நிதியக் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா ஏன் உதவவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.