பள்ளிக்கு லீவு போட்டு ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்ற ஆசிரியர்.. சஸ்பெண்ட் செய்த மாநில அரசு!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். இந்த யாத்திரை தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த யாத்திரையில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியரை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் கனாஸ்யாவில் உள்ள பழங்குடி விவகாரங்கள் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருபவர் ராஜேஷ் கனோஜே. இவர் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ளார். தனக்கு முக்கிய வேலை உள்ளது எனவே விடுமுறை வேண்டும் எனக் கூறி விடுப்பு எடுத்து ராஜேஷ் இந்த யாத்திரையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இவர் யாத்திரையில் பங்கேற்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில்,இவரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி இவர் அரசியல் கட்சியின் ஊர்வலத்தில் ராஜேஷ் பங்கேற்றுள்ளார். பொய்க்கூறி விடுப்பு பெற்று, இந்த செயலில் ஈடுபட்ட ராஜேஷ் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனப் பழங்குடி விவகாரங்கள் துறை உதவி ஆணையர் என் எஸ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.