பருத்தித்துறை நகர சபை ‘பட்ஜட்’ இன்று தோற்கடிப்பு – கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் ‘பல்டி’.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கம் ‘பல்டி’ அடித்ததால் ‘பட்ஜட்’ தோற்கடிக்கப்பட்டது.

பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டக் கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு நகரபிதா ஜோ. இருதயராஜா தலைமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வரவு – செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்த நிலையில் நகர சபை செயலாளரால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 6 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவருமாக 8 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவருமாக 7 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் அடிப்படையில் வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டது என்று நகர சபை செயலாளர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மீளத் திருத்திய பாதீட்டைக் கொண்டுவரவிருப்பதாக அறிவித்து நகரபிதா கூட்டத்தை நிறைவு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.