மிரட்டும் மாண்டஸ் புயல்.. தயாராகும் தேசிய பேரிடர் மீட்புப் படை.. உஷாராகும் மீனவர்கள்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் என்ற புயலாக இன்று மாலை வலுப்பெறுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுதினம் அதி கனமழை பெய்யும் என்று ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புயல் அச்சம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லவில்லை. மன்னார் வளைகுடா பகுதியில் வருகிற ஒன்பதாம் தேதி வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லாமல், படகுகளை கரையோரங்களில் பத்திரமாக நிறுத்தியுள்ளனர்.

நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லவில்லை. 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், மூன்றாயிரம் பைபர் படகுகளும், துறைமுகம் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 70 ஆயிரம் மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் அச்சம் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள், வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்படி கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த 16 மீனவ கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவ்பா தலைமையில் தேசிய போிஇடர் மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேச தலைமைச் செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டு, புயலை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

தமிழ்நாட்டுக்குள் 5 குழுக்களையும், புதுச்சேரிக்கு 3 குழுக்களையும் அனுப்பிவைத்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆந்திரப்பிரதேசத்துக்கு தேவைப்படும்போது அனுப்பிவைக்க குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தனர். இதேபோல, ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை ஆகியவையும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சரவைச் செயலாளர் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.