தற்கொலை தடுக்கப்படக் கூடியதா?

மனித வாழ்வு மகத்தானது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் பல்வேறு இடர்களையும் தாண்டி வாழ்வதிலேயே கவனம் செலுத்துகிறது, வெற்றியும் பெறுகிறது.

இயற்கையின் படைப்பில் உயிர்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது நியதி. இயற்கையின் நியதியை யாரும் இலகுவில் மீறி விடவும் முடியாது. ஆனால், இயற்கைக்கே சவால் விடும் பல காரியங்களைச் செய்துள்ள, தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்ற மனித இனம் மாத்திரம் உயிர் வாழ்க்கை விடயத்திலும் இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ள முனைகிறது. குறிப்பிட்ட காலம் வாழ்ந்தே ஆக வேண்டிய நியதியைக் கொண்ட தனது இன்னுயிரை இடைநடுவில் மாய்த்துக் கொள்கிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு மனிதனுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்க முடியும். அவற்றுள் சில நியாயமானவையும் கூட. அத்தகைய காரணங்களை உலகின் சில நாடுகள் அங்கீகரித்து உள்ளன. மருத்துவக் காரணங்களின் அடிப்படையில், தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குணமாக்க முடியாத நிலையில் நோயினால் தீவிரமாக வருந்துபவர்கள் முறைப்படி விண்ணப்பித்து அரசின் அனுமதியைப் பெற்று சட்டபூர்வமான வழிகளில் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்ளலாம்.

சுவிற்சர்லாந்து நாட்டில் இதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே ஆண்டு தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த வசதியை, தங்களது நெருங்கிய உறவினர்களின் அனுமதியோடு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால், இதனை விடப் பலப்பல மடங்கு அதிகமானோர் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம் இவ்வாறு ஆண்டு தோறும் 8 இலட்சம் வரையானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை வேறு விதமாகச் சொல்வதானால் 40 செக்கனுக்கு ஒருவர் உலகில் தற்கொலை செய்து கொள்கின்றார். இதில் வயோதிபர் முதல் இளையோர் வரை அடக்கம். ஆண்டுதோறும் போர்களில் இறப்பவர்களை விடவும் அதிகமானோர் தற்கொலை மூலம் மரணத்தைத் தழுவிக் கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

வாழ்க்கை மீதான வெறுப்பே இவர்களின் செயலுக்கான பிரதான காரணமாக உள்ளது.

நவீன வாழ்வியலின் தவிர்க்க முடியாத பக்க விளைவுகளுள் ஒன்றாக மன அழுத்தம் உள்ளது. வேலைப் பழு ஒருபுறம் இருக்க, பணியிடங்களில் சந்திக்கும் அசௌகரியங்கள், ஒதுக்கல்கள், பாரபட்சம், பாலியல் தொந்தரவுகள், புறக்கணிப்புகள் என்பவையும் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

அன்றாட பாவனைப் பொருட்களின் அதிகரிக்கும் விலையேற்றம், அதனைச் சமாளிக்கப் போதுமான வருமானம் இல்லாமை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவைகள், அதனைச் சமாளிப்பதற்காகப் பெறப்படும் கடன், அதனை உரிய காலத்தில் மீளச் செலுத்த முடியாத நிலைமை போன்றவை சமானிய மக்களைப் பெரும்பாலும் தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன. வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வோரில் முன்னிலை வகிப்பவர்கள் விவசாயிகள் என்பது எத்துணை துயரம்?

மூத்த குடியான தமிழ்க் குடியின் பண்பாட்டில் தற்கொலை என்பது எப்போதும் இருந்ததில்லை. பண்டைய இலக்கியங்களில் தற்கொலை என்ற சொல்லைக் கூடக் காண முடியாது.

அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத அரசன் வடக்கே இருந்து இறந்தான் என்ற சேதியே முதல் தற்கொலையாக இலக்கியங்களில் பதிவாகி உள்ளது. உணவை ஒறுத்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்தப் பழக்கம் அரசர்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமுமே இருந்து வந்துள்ளது.

அரசர்கள் போரில் தோல்வியைத் தழுவிய வேளைகளில் எதிரிப் படைகளிடம் பிடிபட்டு சின்னாபின்னமாவதைத் தவிர்ப்பதற்காக அரண்மனைப் பெண்டிர் தற்கொலை செய்த சம்பவங்களும் வரலாற்றில் பதிவாகி உள்ளது. இதனை முற்றுமுழுதாகத் தற்கொலை என வரையறை செய்துவிட முடியாது. அரசனின் கொளரவத்தைக் காக்கும் பொறுப்பு பெண்களின் கைகளில் இருப்பதாகக் கூறி, அவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார்கள் என்பதே உண்மை.

பின்னாளில் அரசி வேலு நாச்சியாரின் படையில் இருந்த வீரப் பெண்மணி குயிலி தன்னை வெடி குண்டாக மாற்றி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்தாள் என்பது முதலாவது அரசியல் தற்கொலையாக தமிழர்களின் வரலாற்றில் பதிவாகி உள்ளது. இதன் நீட்சியாக, விடுதலைப் புலிகளின் படையணிகளுள் ஒன்றாகக் கரும்புலிகள் அணி விளங்கியமை அண்மைக் கால வரலாறு.

வரலாற்றுக் காலம் முதல் தற்கொலை என்னும் பண்பாட்டைக் கொண்டிராத, அரசியல் நோக்கத்தில் தற்கொலையை ஒரு ஆயுதமாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு நவீன பண்பாடாகத் தற்கொலை மாறியிருப்பதை தற்காலத்தின் துயரம் என்று அழைப்பதில் தவறு இருக்க முடியாது. ஒரு சிறிய தோல்வியைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நிறைந்ததாக இன்றைய சமூகம் மாறியிருப்பதை என்னவென்று விளக்குவது?

தற்கொலைகளைத் தடுக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. ஏன் முடியாது? நிச்சயமாக முடியும் என்கின்றது சுவிஸ் நாட்டின் அனுபவம்.

உலகின் அமைதியான, செல்வம் கொழிக்கும் நாடுகளுள் ஒன்று சுவிஸ். இங்கே ஆண்டு தோறும் ஆயிரம் வரையானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது தினமும் மூன்று பேர் தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

1996ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக இருந்தது. அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக இந்த எண்ணிக்கை தற்போது ஆயிரமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை மேலும் 25 விழுக்காடு குறைக்கும் எண்ணத்துடன் அரசு செயற்பட்டு வருகின்றது.

இந்த நோக்கத்தை எட்டுவதற்காக அரசு 10 அம்ச வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்து உள்ளது. உலகப் பொதுமையான இந்தத் திட்டத்தின் முதல் படியாக உள்ளது தனி மனித மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்துதல். இது நம் ஒவ்வொருவரினதும் கைகளிலேயே உள்ளது. சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், பெறுமதியான உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை நமது மனதில் தோன்றிவிட்டாலேயே போதும், அதனைச் செயற்படுத்தி விடலாம். அதற்குத் தேவை விழிப்புணர்வு. இதுவே இந்தத் திட்டத்தின் இரண்டாவது படிநிலையாக உள்ளது.

தற்கொலை எண்ணங் கொண்டோரை முன் கூட்டியே கண்டறிந்து, தலையீடு மேற்கொள்ளுதல் முக்கியமான ஒரு அம்சம். எமது குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை, அயலவர்களை அவதானிப்பதன் மூலம் அவர்களின் நடத்தைகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிவதன் மூலம் தற்கொலை அபாயத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

உச்சக் கட்ட மகிழ்ச்சியில் திளைக்கும் போதோ. மிக மோசமான துயரத்தில் இருக்கும் போதோ எடுக்கப்படும் முடிவுகள் என்றுமே தவறானவை என்கிறது அறிவியல். எனவே, முடிவுகளை எடுக்கும் வேளையில் நிதானமாக இருத்தல் அவசியம்.

தற்கால வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகக் கைப்பேசி மாறியுள்ளது. இது தூர உள்ள மனிதர்களை இணைக்கும் அதேவேளை அருகே உள்ள மக்களை விலகச் செய்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக ஒரே வீட்டின் அங்கத்தவர்கள் கூட ஒருவரோடு ஒருவர் மனம்விட்டுப் பேசாத சூழல் தோன்றியுள்ளது. ஒருவரின் சுக துக்கங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், தத்தம் ஆசாபாசங்களை வெளிப்படுத்த யாருமற்ற துயர நிலை உருவாகின்றது. இதுவே ஒரு காலகட்டத்தில் மன அழுத்தத்துக்கும் விரக்திக்கும் வித்திடுகின்றது. சாதாரணமாகத் தடுக்கப்பட்டுவிடக் கூடிய இந்த நிலையை நீடிக்க விடுவதால் யாருக்கும் நன்மை கிட்டப் போவதில்லை.

பெறுமதியான மனித வாழ்வை அற்ப காரணங்களுக்காக அழித்துக் கொள்ளுதல் கவலைக்குரியது. அது தவிர்க்கப்பட வேண்டியது. அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களின் கைகளில் மாத்திரம் இன்றி சூழ உள்ள குடும்பம் மற்றும் சமூகத்தின் கரங்களிலும் உள்ளது. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட்டால் தற்கொலைகளே இல்லாத உலகைப் படைக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.