ரணில் பக்கம் சாயாவிட்டால் சஜித்துக்கு எதிர்காலம் இல்லை! – ஹரின் அறிவுரை.

“முதுகெலும்பில்லாத சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்று சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரது அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான். அவர் தோல்வியடைந்துவிடுவார். அவர் தனிமைப்படுத்தப்படுவார்” – என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய பின் அவரின் இடத்துக்கு ரணில் வராமல் சஜித் பிரேமதாஸ வந்திருந்தால் அவரால் செய்யமுடியாமல் போயிருக்கும்.

சஜித் ஜனாதிபதியாவதை நான் இப்போதும் விரும்புகின்றேன். ஆனால், அதற்கான அனுபவம் – பக்குவம் அவருக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அவர் ஆட்சியைப் பாரமேற்றிருக்க வேண்டும். சவாலை ஏற்று ஜெயித்துக் காட்டியிருக்க வேண்டும். அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. சவாலைக் கண்டு ஓடக்கூடாது.

நீங்கள் எடுத்துச் செய்யுங்கள் என்று மொட்டுக் கட்சி பின்வாங்கியது. அதை நாம் பயன்படுத்திருக்க வேண்டும். அருமையான சந்தர்ப்பம். அதைச் சஜித் செய்யவில்லை.

நாட்டுக்குச் சேவை செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு இன்னும் சந்தர்ப்பம் உண்டு. சஜித், ரணிலின் கீழ் இன்னும் பல விடயங்களைக் கற்றிருக்கலாம்.

அன்று ரணில் செய்த தப்பு அவரது நண்பர்கள் நான்கைந்து பேரோடு மாத்திரம் இணைந்து அரசியல் செய்ததுதான். அதை நாங்கள் எதிர்த்தோம். சஜித்தை அரசியலில் இருந்து அழிப்பதற்கு ரணில் முயற்சி செய்வது போல் தெரிந்ததும் நாம் சஜித்துக்கு ஆதரவாக நின்றோம்.

சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தபோது அவருக்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம். ஆனால், அவர் சென்றதோ வேறொரு பாதையில்.

இப்போது சஜித்தின் கூட்டங்களுக்கு மக்கள் அதிகமாக வருவது அதிசயமான ஒன்று அல்ல. 2023 இல் புதிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படும். அது சஜித் ஊடாக அல்ல. புதிய அரசியல் மாற்றம் ஒன்று எங்கோ இருந்து வரும். பாரம்பரிய முறை மாறும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.