சரணடைந்த எழிலனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துக! – இராணுவத்தினருக்கு உத்தரவு.

இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான எழிலனை (சசிதரன்) அடுத்த வழக்கு விசாரணையின்போது மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இறுதிப் போர் நடவடிக்கையின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் உள்ளிட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றன. விசாரணைகளின் நிறைவில், அந்த நீதிமன்றம் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மீதான மேல் நீதிமன்றின் தீர்ப்பு நேற்று (16) வழங்குவதாக இருந்தது.

இந்நிலையில், அந்தத் தீர்ப்பு தயாரித்து முடிக்கப்படாத நிலையில் தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற வழக்குகளில் 5 வழக்குகளின் விசாரணைகளில் முதலாவதில், குறிப்பிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட எழிலன் தொடர்பான மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பில் இராணுவத்தினர் திருப்திகரமான பதிலை முன்வைக்கவில்லை என்று தெரிவித்தது.

மனுதாரர் முன்வைத்த விடயங்களின் அடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனை மறுப்பதற்கான விடயங்களை இராணுவத்தினர் மன்றில் முன்வைக்கவில்லை என்று மனுதாரர் சார்பில் வாதாடிய சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல் தெரிவித்தார்.

எனவே, மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம், ஆட்கொணர்வு மனுவின் எழுத்தாணையை அனுமதித்த நீதிமன்றம், அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, மற்றைய வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்காதமையால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏனைய மூன்று வழக்குகள் மீதான தீர்ப்புகளையும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே. எஸ்.ரட்ணவேல் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.