நேற்று ஆலோசனை.. நாளை அமைச்சரவை கூட்டம்.. உதயநிதி வெளியிடப்போகும் 2 அசத்தல் அறிவிப்புகள் இதுவா?

நாளை அமைச்சரவை கூட்டம் கூடும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுதோறும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதனுடன் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கியது.

2023 பொங்கல் பரிசு

அதே போன்று வர உள்ள 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பு குறித்து மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதனுடன் கடந்த ஆண்டு போன்றே ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திமுக அரசின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 எப்போது அறிவிக்கப்படும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த திட்டத்திற்கான தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கணக்கிடும் பணி தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். அந்த பணிகள் விரைவில் முடிவடைந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

நேற்று ஆலோசனை

இந்நிலையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில்

சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை சார்பில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் எத்தனை திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன் ஆகிய திட்டங்களை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பொங்கல் தொகுப்பு மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளை அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.