ஆட்சி மாற்றப் பின்னணியில் இராணுவம்! – எல்லே குணவங்ச தேரர் குற்றச்சாட்டு.

இலங்கையில் போராட்டத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இராணுவமும் செயற்பட்டது எனப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எல்லே குணவங்ச தேரர்.

இராணுவத்தின் பிரதானிகள் சிலரே இதன் பின்னணியில் செயற்பட்டனர் எனவும், அவர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது எனவும் தேரர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் பலவீனமான நிலையை உருவாக்குவதற்கான பேச்சுகள் அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றன. இதில் இலங்கை இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். போர்க்குற்றச்சாட்டு விவகாரத்தை காண்பித்து இராணுவ அதிகாரிகளை, தமது பக்கம் இழுத்துள்ளனர்.

அரச சொத்துகள் தீக்கிரையாக்கப்படும்போது இராணுவம் ஏன் அமைதி காத்தது? கடைசி நேரத்தில் ஜனாதிபதியின் உத்தரவைக்கூட பாதுகாப்பு தரப்பு ஏற்கவில்லை. அமெரிக்க தூதுவர், தூதுவர் போல் செயற்படவில்லை. அவர் நலன்புரி அமைப்பொன்றின் செயலாளர் போல்தான் செயற்பட்டு வருகின்றார். ஏனைய சில தூதரகங்களும் இதனுடன் தொடர்புபட்டிருந்தன.

நாட்டில் நெருக்கடி நிலைமை இருந்தது. அதனை சர்வதேச சக்திகள் பயன்படுத்திக்கொண்டன. உண்மையாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். அதன்பின்னர் சர்வதேச சக்திகள் புகுந்தன. றோ அமைப்பு, சி.ஐ.ஏ. போன்ற புலனாய்வு அமைப்புகளும் இறங்கின. டயஸ்போராக்களும் இருந்துள்ளனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.