சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க ஈஷா கோரிக்கை!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் அங்கிருந்து வெளியே சென்ற நிலையில் செம்மேடு பகுதியில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மரணம் தொடர்பாக அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை விடுத்துள்ள ஈஷா, ”சுபஶ்ரீ அவர்களின் அகால மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மரணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. சுபஸ்ரீ குறித்த வழக்கு பதிவாகி காவல்துறை விசாரணையை துவங்கியது முதல் இன்று வரை விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் முறையாக வழங்கி உள்ளோம். காவல்துறை தனது விசாரணையை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் வெற்று சந்தேகங்களை ஊதிப் பெரிதாக்கி, அபத்தமான அனுமானங்களை அள்ளி இரைத்து வதந்திகளையும், அவதூறுகளையும் ஒரு சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவதும், பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவல்துறை இவ்வழக்கை விசாரித்து வரும் நிலையில், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் எவ்வித கருத்தும் வெளியிட கூடாது என்ற உறுதியில் இத்தனை நாட்கள் நாங்கள் அமைதி காத்தோம். ஆனால், ஊடக முக மூடிகளை அணிந்து கொண்ட சில யூ-டியூப்பர்கள், புலனாய்வு என்ற பெயரில் மர்ம நாவல்கள் எழுதும் திறன் படைத்த ஊடக எழுத்தாளர்கள், மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள் சுபஸ்ரீ-யின் மரணத்தை தங்கள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.குறிப்பாக ஈஷாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் தற்போதைய சூழலை உள்நோக்கத்துடன் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். மிகவும் திட்டமிட்ட முறையில் ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, ஊடகங்களின் மூலமாக அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும்,

ஈஷா யோகா மையம் முழுமையான வெளிப்படைதன்மையுடன் இயங்கி வருவதுடன், வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமான அரசாங்க அமைப்புகளின் ஆய்வுகளுக்கு உட்பட்டு சரியான முறையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.