நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோஷிமத் நகரம்!

இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதிதான் ஜோஷிமத் நகரம். மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செல்பவர்களுக்கும் ஜோஷிமத் நகரம் நுழைவாயிலாக அமைந்துள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய 4 மடங்களில் ஜோஷிமடமும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோஷிமத் பகுதியில் பல இடங்களில் நிலவெடிப்பு ஏற்பட்டு, கட்டடங்களிலும் விரிசல் உண்டானது. இதையடுத்து அந்தப் பகுதியில் புவியியல் வல்லுநர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர். மோசமான புவியியல் அமைப்பைக் கொண்ட இந்த நகரம் அடிக்கடி பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்துள்ளது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள நில வெடிப்பு குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்த போது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.அதாவது ஜோஷிமத் நகரம் மெல்ல புதைந்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்தப்பகுதி தொடர்பான செயற்கைகோள் படங்களை நிபுணர்கள் ஆய்வு செய்த போது மேலும் அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்தது. ஜோஷிமத் நகரம் மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருவது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பகுதி முழுவதும் சுமார் 6.5 செ.மீ அளவிற்கு பூமிக்குள் புதைந்து வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டின. ஜோஷிமத் நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு மலைநகரத்திலும் நில வெடிப்பு மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது இந்த ஆய்வு முடிவை உறுதிப்படுத்தியுள்ளன.

மலை நகரமான ஜோஷிமத் பகுதியில் மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கல் பணிகளால் தான் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 1976 ஆம் ஆண்டிலேயே ஜோஷிமத் நகரம் எதிர்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மிஸ்ரா கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தற்போது பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

அந்த அறிக்கையில், ஜோஷிமத் நகரில் வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற வேண்டும், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தக் கூடாது, எந்த இடங்களில் வீடுகளை அனுமதிக்கக் கூடாது என்பன போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த நகரம் புதையுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜோஷிமத் நகருக்கு அருகில் தேசிய அனல்மின் கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் தபோவன் திட்டத்தால் தான் தங்கள் நகரம் இப்படி ஒரு மோசமான பாதிப்பை சந்தித்திருப்பதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் அங்கு ஏராளமான விடுதிகளும் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மலைப்பகுதிகள் வெட்டப்படுகின்றன. இவைகளும் இந்த மோசமான சூழலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து விரிசல் ஏற்பட்ட கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்கு உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து உத்தரகாண்ட் அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.