மிக நீளமான சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தர் பிரதமர் மோடி
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸின் பயணத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சொகுசு கப்பல் தனது பயணத்தை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக பங்களாதேஷ் சென்றடையும். இந்தியா மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் உள்ள 27 நதி அமைப்புகளை இந்த கப்பல் கடந்து செல்ல உள்ளது. மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பல், சொகுசு வசதிகளுடன் 36 சுற்றுலா பயணிகளின் தாங்கும் திறன் கொண்டதாக திகழ்கிறது. இந்த கப்பலின் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் முழுமையாக பயணிக்கின்றனர்.
இந்த கப்பலின் 51 நாட்கள் பயணத்தின் போது, உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதிக்கரைகள், பீகாரின் பாட்னா, ஜார்க்கண்ட்டின் சாஹிபஞ்ச், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, பங்களாதேஷின் டாக்கா, அசாமின் குவாஹத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பலில் ஒரு நாள் இரவு தங்கி பயணிக்க ரூ.25,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே நிகழ்வில் வாரணாசியில் டென்ட் சிட்டி எனப்படும் கூடார நகரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது கங்கை நதிக்கரைப் பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இந்த திட்டம், நதிக்கரைப்பகுதிக்கு எதிரில் உள்ள நகர பகுதியில் உருவாக்கப்பட்டு, அங்கு தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த திட்டம் வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பொதுத்துறை, தனியார் துறைகளின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடார நகரத்திற்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு நதிக்கரையிலிருந்து படகுகள் மூலம் செல்வார்கள். இந்த கூடார நகரம், அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். மழைக்காலங்களில் நதிநீர் மட்டம் உயரும் என்பதால், ஒவ்வோர் ஆண்டும் 3 மாதங்கள் மட்டும் இந்த நகரம் செயல்பாட்டில் இருக்காது.