வெளியேறிய விக்கி தரப்பைச் சமரசப்படுத்த இரவிரவாக தீவிர முயற்சி!

தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டமைப்பை ஸ்தாபிக்கும் முயற்சியில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனை மீண்டும் கூட்டமைக்கும் பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வரும் சமரச முயற்சி நேற்றிரவு முழுமூச்சாக நடைபெற்றது என அறியவந்தது.

பிரேரிக்கப்பட்ட சமரசத் திட்டத்துக்கு இணங்கும் நிலைமை தரப்புகளுக்கு இடையே இருந்தாலும், அதனை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் அடியோடு இல்லை எனச் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி என்று பெயர் மாற்றம் பெற்று ‘மீன்’ சின்னத்துடன் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் ‘மீன்’ சின்னத்தை புதிய கூட்டின் சின்னமாக அறிவிக்கவும், அதன் பொதுச்செயலாளராக சி.வி. விக்னேஸ்வரனை அறிவிக்கவும் உடன்படும் சமரசத் திட்டமே நேற்றிரவு பிரயோகிக்கப்பட்டு ஓரளவு இணக்க நிலை ஏற்பட்டது.

‘மீன்’ சின்னக் கட்சிக்கு இப்போது பொதுச்செயலாளராக இருப்பவர் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

தமது ‘மான்’ சின்னத்தையும், அதன் மூலம் புதிய கூட்டின் பொதுச்செயலாளர் பதவியையும் இலக்கு வைத்த சி.வி. விக்னேஸ்வரன், அது கிட்டாத நிலையில் கூட்டமைக்கும் முயற்சியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே.

நேற்றிரவு ‘மான்’ சின்னத்துக்குப் பதிலாக ‘மீன்’ சின்னத்தை ஏற்கவும், அதேசமயம் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைத் தமக்குத் தரவும் விக்கியர் அடம் பிடித்தார் எனத் தெரிகின்றது.

‘மீன்’ சின்னத்தை வைத்திருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினர் அதற்கு இணங்கினாலும், கட்சியின் உரிய அதிகார பீடங்களைக் கூட்டி, அந்த மாற்றங்களை இனிச் செய்து தேர்தலுக்கு முன்னர் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குச் சாத்தியம் அடியோடு கிடையாது எனச் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.