சர்வதேச சமூகம் விரும்பும் தலைமைத்துவம் வேண்டும்! – சஜித் வலியுறுத்து.

“நாட்டை மீட்பதற்கு பணத்தை அச்சடித்தல் மட்டும் போதாது. சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய தலைமைத்துவம் தேவை.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 70 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று தமனல்வில மத்திய கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நேற்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இளைஞர்கள் அரசியல்வாதிகளின் காலடியில் செல்லும் கலாசாரமும் அடிமைத்தனமும் ஒழிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறக் கூடாது.

நாட்டில் இளைஞர்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் வாய்ப்புகள் நிறைந்த தேசத்தை உருவாக்குவதுமே அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய பணியாக அமைய வேண்டும்.

74 வருடங்களாக நாட்டுக்கு வேலை செய்வதற்கு அரசு ஒன்றே தேவை என்ற கருத்தோட்ட பழக்கம் இருந்தது. கடந்த காலங்களில் இருந்த எதிர்க்கட்சிகள் மக்களுக்குச் சேவை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயல்வதையே செய்து வந்தன. இந்தப் போக்கை மாற்றி புதிய பிரவேசத்தை நான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் நிலைப்படுத்தியுள்ளனர்.

இதுவரை,70 பஸ்கள் பாடசாலைக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு 339.2 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. மூச்சுத் திட்டத்தின் மூலம் 56 மருத்துவமனைகளுக்கு 1,719 இலட்சம் ரூபா மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அதிகாரம் இல்லாத போதும் கூட மக்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை தற்போதைய எதிர்க்கட்சியே செலவிட்டது.

ஜனாதிபதி பதவியோ,பிரதமர் பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ கிடைக்காமலே இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.

இத்தனை பணிகளையும் செய்யும் போதும் பல்வேறு நபர்கள் பலவிதமாக விமர்சித்தாலும் அந்த விமர்சனங்களால் நாடு அபிவிருத்தியடையாது.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு பணத்தை அச்சடித்தல் மட்டும் போதாது. சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய தலைமைத்துவம் தேவை. எதிர்மறை மற்றும் பிற்போக்குத்தன எண்ணப்போக்குகளிலிருந்து விடுபட்டு நேர்த்தியான சிந்தனை மூலம் நாட்டை மீட்டெடுக்க புதிய வேலைத்திட்டம் தேவை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.