யாழில் தமிழ்க் கட்சிகளின் புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் – கலந்துரையாடல் ஆரம்பம்.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதவுள்ள நிலையில் விசேட கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் விசேட கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

கலந்துரையாடலுக்குப் பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

புளொட் சார்பாக த.சித்தார்த்தனும், ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ்த் தேசியக் கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும், ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்ட இழுபறி காரணமாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் முன்னாள் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் அணியினர் இடைநடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

விக்னேஸ்வரன் அணியினரை இணைக்க சமசர முயற்சிகள் மேற்கொண்டபோதும் பலனளிக்காத நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டணி அமைக்க முடிவு எடுத்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.