இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 11 ஆம் தேதி வெங்காடு பகுதியிலிருந்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் ஒருவரை மறித்த, இரு இளைஞர்கள் காவலர்கள் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. காவலன் செயலி மூலம் அப்பெண் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை மீட்பதற்காக, இருவரையும் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதிக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மூலம் நாகராஜ் காவல்துறையினரை நோக்கி சுட்டதாகத் தெரிகிறது. பதிலுக்கு காவல்துறையினர் சுட்டதில் நாகராஜ் காலில் காயம் ஏற்பட்டாதக் கூறப்படுகிறது. மேலும் தப்பிக்க முயன்ற பிரகாஷ் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.