தேர்தலை ஒத்திவைக்க அரசு சதி! – சபையில் சஜித் சீற்றம்.

அரசின் சதித் திட்டங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் காலம் தாழ்த்த நாம் இடமளிக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருந்தபோதிலும், பரந்த அர்த்தத்தில் அது ஒரு நல்ல சட்டம். தேர்தல் முறைமை மாற்றத்துக்கு இது முக்கியமானது. சில திருத்தங்கள் இருந்தாலும் பேச்சு மூலம் அதனை மேற்கொள்ள முடியும்.

இந்நாட்களில் உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயன்முறை இடம்பெற்று வருவதால் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், இதைச் செயற்படுத்தும் நேரத்தில் சில சிக்கல் உள்ளது. இதன் மூலம் குழப்ப நிலை நிலவுகின்றது.

இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றினால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இடையூறாக அமையும்.

இந்தச் சட்டமூலத்தின் வரைவின்படி, வேட்பாளர்கள் தங்கள் செலவுகள் குறித்த முறையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காவிடில் அது குற்றமாகும். சமர்ப்பிக்காவிட்டால் மனுவைக் கூட தாக்கல் செய்யலாம். இது மிகவும் நல்ல சரத்து என்றாலும் 2023 மார்ச் தேர்தலில் இது சிக்கலை ஏற்படுத்தும்.

இந்த வரைவு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், விதிமுறைகள் பிறப்பிக்கப்படும். மார்ச் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இது தடையாக இருக்கும். இதன் ஊடாகத் தேர்தலை ஒத்திவைக்கும் சதித்திட்டத்தை அரசு செயற்படுத்த முயற்சிக்கின்றது. இது மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயலாகும்.

இந்தச் சதியில் பங்காளியாக வேண்டாம் என நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

நிறைவேற்று அதிகாரம் இவ்வாறு சட்டமன்றத்தின் செயற்பாட்டில் தலையிட முடியுமா?” – என்றும் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.