மொழியை கற்பதில் உள்ள தடைகள் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் அரச ஊழியர்கள்

அரச ஊழியர்களுக்கு இரண்டாம் அரசகரும மொழியை கற்றுக்கொள்வதற்கான, சலுகைத் காலத்தை நீட்டிக்காததால் அரசு ஊழியர்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

2007ற்குப் பின்னர் பொது சேவையில் இணைந்த அரச ஊழியர்கள் இரண்டாம் அரசகரும மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், சிங்கள மொழி ஊடாக பொது சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்கள் தமிழ் மொழி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, தமிழ் மொழி ஊடாக பொது சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்கள் சிங்கள மொழி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, 2020 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரை அனைத்து அரச ஊழியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டதாக தேசிய தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினுத், சலுகை காலம் நிறைவடைந்துள்ளதால் இரண்டாம் அரசகரும மொழியில் தேர்ச்சி பெறாத, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்ற விடயங்களை பெற்றுக்கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் அரசகரும மொழி தேர்ச்சி தொடர்பாக அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக பொதுத்துறை தொழிற்சங்கங்களுக்கும் முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையே பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய இரண்டாம் அரசகரும மொழி தேர்ச்சி குறித்து அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கை வெளியாகும் வரை, பொது நிர்வாக சுற்றறிக்கை ஊடாக ஜூன் 30 வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டது.

சலுகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுடன் இதுத் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், 2020 ஜூன் 30ற்குப் பிறகு இரண்டாம் அரசகரும மொழி தேர்ச்சி பூர்த்தி செய்யப்படாததால் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இடைநிறுப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பெரும்பாலான அரச ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாம் அரசகரும மொழி தேர்ச்சி பெறுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினைத் தொடர்பிலும் அதிகாரிகள் அவதானம் செலுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசகரும மொழி தேர்ச்சி விடயத்தில் நிவாரணம் வழங்குவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அல்லது சலுகை காலத்தை நீடிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தொழிற்சங்க முன்னணி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.