19இல் இருந்து 20ற்கு தப்பிப்பிழைப்பதும் புதிதாக இனைவதும்

20வது அரசியலமைப்பு திருத்த வரைபு நேற்று (03) வர்த்தமானியில் வௌியாகி இருந்தது. இதன்படி அதில் திருத்தப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட முக்கிய சில விடயங்கள் இங்கு உங்களுக்காக தரப்படுகின்றது.

“ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை 20வது திருத்தத்தில் நாடாளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னைய அரசியலமைப்பு திருத்தத்தில் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மூவர் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிவில் பிரதிநிதிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

19வது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 20வது திருத்தத்தில் அது தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20வது திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

19வது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் திருத்தப்பட்டு, அவ்வாறானவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35-இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவும், கொள்கை வகுப்பு ஆணைக்குழுவும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைய நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது.

எனினும், 20வது அரசியலமைப்பு திருதத்திற்கு அமைய, நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.
இதேவேளை, பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக 20வது அரசியலமைப்பு திருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் என்ற வரையறை 20வது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.