யோகி பாபுவின் பொம்மை நாயகி விமர்சனம்.

தினக்கூலி வேலைக்கு செல்லும் யோகிபாபு, மனைவி சுபத்ரா மற்றும் மகள் ஸ்ரீமதியுடன் வாழ்ந்து வருகிறார். வறுமையில் இருந்தாலும் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருக்கின்றார். அதேபகுதியில் யோகிபாபு தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவரும் வசித்து வருகிறார்.

அவரை தனது அண்ணனாகவே எண்ணி அவர் கொடுக்கும் வேலைகளையும் யோகிபாபு அவ்வப்போது செய்து வருகிறார். ஆனால் யோகிபாபுவின் தாய் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் முதல் மனைவியின் மகன் இவர்களை தனது உறவுகளாக எண்ணாமல் விலகி செல்கிறார்.

இந்நிலையில், யோகிபாபு தனது குழந்தையுடன் திருவிழாவிற்கு செல்லும் போது, சிலரால் குழந்தை கடத்தப்படுகிறார். குழந்தையை தேடி கண்டு பிடிக்கும் பொழுது மேல் சாதியில் இருக்கும் ஒரு சிலர் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதை பார்க்கிறார். அவர்களிடம் தன் குழந்தையை போராடி காப்பாற்றுகிறார் யோகிபாபு.

இந்த விஷயத்தை தன்னுடைய அண்ணனிடம் கொண்டு செல்கிறார். ஆனால் தவறு செய்தவர்கள் அவருடைய சாதி என்பதால் இதனை தட்டிக்கழிக்கிறார். மறுபுறம் இந்த பிரச்சனைக்கு எப்படியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஹரி கிருஷ்ணன் போராடி வருகிறார்.

இறுதியில் யோகிபாபு ஆதிக்க சாதியை எதிர்த்து போராடி வெற்றி பெற்றாரா? ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக கதாப்பாத்திரத்தை தாங்கி பிடித்துள்ளார் யோகிபாபு. கதாப்பாத்திரத்திற்கு தேவையான உணவுகளை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.

யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். மகளாக வரும் ஸ்ரீமதி அவர் பணியை சிறப்பாக செய்து கைத்தட்டல் பெறுகிறார். அப்பா மகள் இருவரின் உணர்வுகளை இருவரும் அழகாக கையாண்டுள்ளனர். தந்தை ஜிஎம்.குமார், அண்ணன்கள் அருள்தாஸ், ஹரி, நண்பர் ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் ஆகியோர் அவர்களின் பணியை சரியாக செய்து முடித்துள்ளனர்.

ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனையை எடுத்து சொல்ல முயற்சித்திருப்பதற்கு இயக்குனர் ஷானுக்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தியிருக்கும் கதையின் சாயல் போன்று இருந்தாலும் இப்படம் சற்று வித்யாசப்பட்டுள்ளது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த காட்சியை வெளிக்கொண்டிருக்கிறது. காட்சிகளில் வரும் வசனங்கள் எதார்த்தத்தை வெளிப்படுத்தினாலும் சுவாரசியம் குறைவாக உள்ளது.

காட்சிகளின் மூலம் அந்த இடத்திற்கே கொண்டு செல்கிறார் ஒளிப்பதிவாளர் அதிசயராஜ். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் பொம்மை நாயகி – அழகு பொம்மை.

Leave A Reply

Your email address will not be published.