‘குயிலிசை அரசி’ ‘ஜானகி அம்மா’ காலமானார்!

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகியும், கோடிக்கணக்கான இசை இரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவருமான எஸ். ஜானகி (வயது 88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது உன்னதமான இசைப் பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட 20 இற்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்துள்ளார்.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதை மயக்கக்கூடியவை.

தமது தனித்துவமான குரல் வளத்தால் பல தலைமுறை இரசிகர்களைக் கட்டிப்போட்ட ஜானகி அம்மா, 4 தேசிய விருதுகளையும், 33 மாநில அரசு விருதுகளையும் வென்று இந்தியத் திரையிசைக்கு மகுடம் சூட்டியவர். இவரது மறைவு இந்திய இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகின்றது.

ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினரும், இசை இரசிகர்களும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய இசை வரலாற்றில் ஒரு பொற்காலத்தின் முடிவாகப் பார்க்கப்படும் இவரது மறைவு, இசை இரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.