வாணி ஜெயராம் இறந்தது எப்படி? உடற்கூறாய்வில் தகவல்..!

இந்திய திரையுலகில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10.45 மணிக்கு பணிப் பெண் மலர், வாணி ஜெயராம் வீட்டுக்கு சென்றுள்ளார். அழைப்பு மணியை நீண்ட நேரம் அடித்தும் கதவு திறக்காததால், வாணி ஜெயராமின் சகோதரிக்கு மலர் தகவல் கொடுத்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கையறையில் கட்டிலுக்கு அருகே சடலமாக வாணி ஜெயராமன் மீட்கப்பட்டார்.

இதையடுத்து அவரின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாணி ஜெயராமின் நெற்றியில் ஒரு அங்குலம் அளவுக்கு காயம் ஏற்பட்டது உடற்கூராய்வில் அம்பலமாகியுள்ளது. அதில், தூக்கத்தில் இருந்து திரும்பிப் படுக்கும் போதோ அல்லது எழுந்திருக்க முயன்றபோதோ கட்டிலில் இருந்து கீழே விழுந்திருக்கலாம். அப்போது படுக்கை அறையில் உள்ள டீப்பாயில் விழுந்து வாணி ஜெயராம் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடு நெற்றியில் ஆழமான காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு உண்டாகி உயிர் பிரிந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேசமயம், முழு உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்பே, தூக்கத்திலிருந்து விழுந்தாரா அல்லது உடல்நலக் கோளாறால் மயங்கி விழுந்தாரா என்பது குறித்த முழு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்திருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வாணி ஜெயராமின் வீட்டில் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.