நகை பறிக்க வந்த திருடனின் கைவிரலை கடித்து துண்டாக்கிய பெண்!

உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பியில் பெண் ஒருவர் காவல்நிலையத்திற்கு ஒரு நபரின் துண்டிக்கப்பட்ட விரலோடு வந்துள்ளார். இதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியுடன் விசாரித்துள்ளனர்.

அதன்படி, அந்த பெண்ணின் பெயர் நீட்டா தேவி எனவும் அருகே உள்ள மயோஹார் என்ற கிராமத்தில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அருகே உள்ள சந்தைக்கு சென்ற காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி வீடு திரும்பியுள்ளார்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண் நடந்து வந்தபோது, மர்ம நபர் ஒருவர் பெண்ணை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஜெயின், கையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறிக்க முயன்றுள்ளார். அத்துடன் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் பெண்ணோ பயந்து போகாமல், அந்த நபருடன் வீராவேசமாக போராடியுள்ளார். பெண் கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அவரது வாயை கைவைத்து அந்த நபர் அடைத்துள்ளார். அப்போது அந்த பெண் திருடி, அத்துமீற முயன்ற அந்த நபரின் கை விரலை ஆவேசமாக கடித்துள்ளார். நபரின் விரல் துண்டாகி கீழே விழுந்துள்ளது.

அதற்குள்ளாக ஊர் மக்கள் அங்கு திரண்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காரரி பகுதி காவல்துறையினர், பெண்ணின் தற்காப்பு வீரத்தை வெகுவாக பாராட்டினர். பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நபரை பிடிப்போம் என விசாரணை அதிகாரி கிருஷ்ணா நாராயண் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.