உள்ளூராட்சி சபைத் தேர்தலை ரணில் ஒத்திவைக்க முயற்சிப்பது ஏன்? – நெடுந்தீவில் காரணம் கூறினார் சிறீதரன்.

“மக்களால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட தற்போதைய ரணில் விக்கிரமசிங்க, தான் ஜனாதிபதியாக மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட முனைகின்றார்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் தேர்தல் செயற்பாட்டு அலுவலகமும் இன்று நெடுந்தீவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தபால் மூல வாக்களிப்பு நடத்துவதற்கான செயற்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் என்பதோடு கடந்த தேர்தல்களில் பல தடவை ஜனாதிபதியாகப் போட்டியிட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். இந்தநிலையில் தான் ஒரு தடவை என்றாலும் மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட அவர் நினைக்கின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட்டு அதன் மூலம் தான் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றும், அதற்காக தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்களைக் கொண்டு அடிமட்ட சிங்கள மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ரணில் முனைகின்றார்

நாங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட இனம். எமது உரிமைகளுக்காக கடந்த 80 வருடங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றோம்.

நெடுந்தீவு பிரதேசம் எங்களது பூர்வீக அடையாளம். இதனையும் சிங்கள தேசம் ஆக்கிரமிக்க முயல்கின்றது. இப்போதும் கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

நெடுந்தீவுக்கான இறங்குதுறை கூட படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதுடன் பயணிகள் சுதந்திரமாக சென்றுவர முடியாத நிலை காணப்படுகின்றது” – என்றார்.

நெடுந்தீவு கிழக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபைக்காகப் போட்டியிடும் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.