பிரபல காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.

தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி. உடல்நலக் குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.

காமெடி நடிகர் மயில்சாமி(57) சென்னையில் காலமனார். நேற்று இரவு (ஜன., 18) சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வரும் வழியில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் மெக்கானிக் கமலின் நண்பராக ஒருவராக நடித்து வெளிச்சம் பெற்றார். அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து அசத்தினார். ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கடைசியாக தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் டப்பிங் பணியை கூட முடித்துவிட்டு வந்தார்.

ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி இருவரும் நடிகர்களாக உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.